சுவையும் மணமும் கொண்ட மருந்து பானகத்திற்கு மணப்பாகு என்று பெயர்.
இது மூலிகைச் சாறுகள், பழச்சாறுகளுடன் கற்கண்டு அல்லது சர்க்கரையைக் கரைத்து சூடாக்கி மணப்பாகு பதம் வந்ததும் நிறுத்தி எடுத்துக் கொள்வதாகும்.
சில மணப்பாகுகளில் சர்க்கரையுடன் தேனும் சேர்க்கப்படும். மணப்பாகு செய்யும் போது சேர்க்கப்படும் சர்க்கரை கற்கண்டு தேன் இவைகள் மருந்துக்கு சுவை தருவது மட்டுமின்றி மருந்து கெட்டு விடாமல் நீண்ட நாள் இருக்கவும் துணை செய்கின்றன.
1. சர்க்கரை கருகி பாத்திரத்தின் அடியில் கெட்டியாக பிடித்துக் கொள்ளாமலும் அதன் விளைவாக கசப்புச் சுவையை அடையாமல் இருக்க வேண்டுமானால் சர்க்கரையை முதலில் பாத்திரத்திலிட்டுக் கொதிக்க வைக்கக் கூடாது.
சாறு வகைகள் போன்ற நீர்ம ஊடகங்கள் தான் முதலில் கொதிக்க வைக்கப்பட வேண்டும்.
பின்னரே அதில் சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து விடாமல் கிளற வேண்டும்.
2. கலவைக்கு அதிகமான தீயையிடாமல் மிதமான தீயையே இட வேண்டும். கலவையை அதிகமாகக் கொதிக்க விடாமல் ஏறக்குறைய ஒரே கொதிநிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
3. பாகை, பதம் வந்தவுடன் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். அப்போது தீயை முற்றிலுமான நீக்கி விட வேண்டும்.
4. தேவையேற்பட்டால் சூடாக இருக்கும் போதே மணப்பாகை வடிகட்டிவிட வேண்டும்.
5. பாகுபதத்தை நிர்ணயிப்பது சற்று கடினம். ஆகையால் அதற்கு இடைஞ்சல் ஏற்படாவண்ணம் சாறுகள், குடிநீர்கள், கியாழங்கள், பழரசங்களைக் கொதிக்க வைப்பதற்கு முன்பே நன்றாக வடிகட்டிவிட வேண்டும்.
6. கொதிக்க வைக்கும் போது பானகத்தின் மேல் நுரை கட்டினால் அவற்றை ஜாக்கிரதையாக அப்புறப்படுத்த வேண்டும். இவற்றை ஈரப்பதமற்ற, தூய கண்ணாடிப் பாத்திரங்களிலோ பாலீதின் கொள்கலன்களிலோ பத்திரப்படுத்தலாம். ஆறிய பின்னர் கொள்கலன்களில் நிரப்ப வேண்டும். கொள்கலன்களின் மூடி விளிம்பு வரை நிரப்பாமல் மூடிக்கும் கழுத்துப் பகுதிக்கும் நடுவே சற்று இடைவெளி இருக்கும்படி நிரப்பப்பட வேண்டும்.
இவற்றை ஆறு மாதங்களுக்குள் பயன்படுத்துவதே நல்லது.