மாத்திரையை உருண்டை எனவும் குளிகை எனவும் கூறுவர். சிலவகை மருந்துச் சரக்குகளை சுத்தி செய்து சிலவகை மூலிகைச் சாற்றினால் குறிப்பிட்ட அளவுள்ள எடையில் வடிவத்தில் உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதே மாத்திரையாகும். முதலில் தூய்மை செய்ய வேண்டிய சரக்குகளைத் தூய்மை செய்தும் சுத்தி முறைப்படி சுத்தி செய்ய வேண்டியவற்றை சுத்தி செய்ய வேண்டும். மருந்து சரக்குகளைத் தனித்தோ அல்லது ஒன்றாக சேர்த்து இடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு தண்ணீர் அல்லது வேறுவகை சாறுகளை சேர்த்துக் குறிப்பிட்ட காலம் வரை நன்றாக அரைத்து விழுதாகி உருட்டும் பக்குவம் வந்தபின் அளவான மாத்திரைகளாக உருட்டும் போது விரல்களில் சிறிது நெய் தடவிக் கொள்ளலாம். இந்த மாத்திரைகளை முறைப்படி நிழலிலோ அல்லது சூரிய வெளிச்சத்திலோ உலர்த்தி வைக்க வேண்டும். அரைத்த மருந்து மாத்திரையாக உருட்டப்படும் போது விரல்களுக்கு இடையில் ஒட்டாமலிருப்பதே மாத்திரை உருட்டும் பக்குவம் ஆகும். மாத்திரைகள் தங்களுடைய நிறத்தையோ மணத்தையோ சுவையையோ, உருவத்தையோ இழக்காமல் இருத்தல் வேண்டும். மாறுபாடு அடைந்தால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.