Contact Us

Tips Category View

செந்தூரங்கள் தயாரிப்பு முறைகள்

உலோகங்கள், பாஷாணாதிகள், இரச, உபரசங்கள், உப்புகள் ஆகியவற்றை சில வகை மூலிகைச் சாறுகளிலாவது புகை நீரிலாவது அரைத்து புடமிட்டோ அல்லது எரித்தோ அல்லது வறுத்தோ அல்லது நன்கு அரைத்து வெயிலில் வைத்துச் சிவக்கும்படியாக செய்தோ எடுத்துக் கொள்வதே சித்த மருத்துவப்படி செந்தூரம் செய்யும் முறையாகும்.
இதில் முறைப்படி நன்கு சுத்தி செய்த மூலப் பொருள்களே செந்தூரம் உபயோகப்படுத்தப்படுகின்றன. செய்ய செந்தூரங்கள் இரண்டு விதமான முறைகளில் செய்யப்படுகின்றன.

1. குப்பி எரிப்பு அல்லது பதங்கிக்கும் முறை.
2. புடமிடும் முறை.

1.  குப்பி எரிப்பு (அல்லது) பதங்க முறை :
இம்முறையில் இரசமும், கந்தகமும், பங்கு கொள்வதாக இருந்தால் முதலில் கந்தகத்தைக் கல்வத்திலிட்டு பொடித்த பின்னர் அத்துடன் ரசத்தை சேர்த்து இரண்டும் கஜ்ஜணி என்று கூறப்படும் கருமை நிறத்தூளாகும் வரை நன்கு அரைத்த பின்னரே அதில் மற்ற சரக்குகளை ஒவ்வொன் றாகக் கலந்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அவற்றுடன் வெள்ளி அல்லது தங்கம் சேர்வதாக இருந்தால் அவைகளை ரேக்காகச் செய்து கொண்டு முதலில் இரசத்துடன் சேர்த்தரைத்து அதன் பின்னர் கந்தகத்தையும் அதில் அரைத்து கஜ்ஜளியாக்கவும்.
இம்முறையில் காசிக்குப்பி அல்லது எனாமல் கிண்ணங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இக்கலங் களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவைகளின் வாய் விளிம்பைத் தவிர மற்ற பாகங்கள் மறையும் அளவிற்கு ஏழு சீலை மண் செய்த துணிகளைக் கொண்டு ஒன்றன் மேல் ஒன்றாக சீலை செய்து நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை ஒன்றின் மேல் ஒன்று கவிழ்ந்த நிலையில் வைக்கவும். பின்னர் அந்த ஜதைக் கிண்ணங் களின் உதட்டு விளிம்புகள் பொருந்தும் இடங்களில் மேலும் கீழுமாக சிறு துவாரமிட்டு அதன்வழியே கம்பியைச் செலுத்தி இரண்டையும் நன்றாகப் பிணைத்து கட்டிவிடவும். மருந்தை உள்ளே செலுத்தவும். பாகம் அறியும் வகைசெய்யும் விதத்தில் மேல் கிண்ணத்தில் நடுமையத்தில் சிறு துவாரம் ஒன்றினையும் இட வேண்டும். சீலை செய்யும் போது இந்த துவாரத்தை மூடக்கூடாது.
ஓர் அகன்ற மண் பாத்திரத்தின் அடியில் 1/2 - 1 அங்குலம் உயரம் வரை மணலைப்பரப்பி அதன் மேல் பாதி அளவுக்கு பொடித்த மருந்துச் சரக்குகள் நிரம்பிய சீலை செய்த கலங்களை வைத்துச் சுற்றிலும் மணல் கொண்டு மூடவும்.
பின் மண்பாத்திரத்தை அடுப்பிலேற்றி எரிக்கவும். செந்தூர செய்முறையில் 3 வித எரிப்பு முறைகள் பின்பற்றப்படும். விளக்கு சுடர் போன்ற எரிபொருள்களின் தீநாக்குகள் ஒன்று சேர்ந்து சிறிதளவில் எரிவதை தீபாக்கினி எனவும், மலர்ந்த தாமரைப்பூ போலத் தோன்றுமாறு பல தீநாக்குகள் தனித்துத் தோன்றும் வளர்ந்து சிறிது தீவிரமாக எரிவதை கமலாக்கினி எனவும் தீ நாக்குகள் இடைவெளியற்று அடப்பின் உட்புறம் முழுவதும் பரப்பி அடர்த்தியாக சப்தத்துடன் தீவிரமாக எரிவதை காடாக்கினி எனவும் கொள்ளவும். பெரும்பாலும் செந்தூரங்கள் மூன்று நாட்கள் எரிக்கப்படுகின்றன. அப்படி எரிக்க வேண்டியிருந்தால் முதல் 24 மணி நேரம் தீபாக்கினியாலும் அடுத்த 24 மணி நேரம் கமலாக்கினியாலும் அதற்கு அடுத்த 24 மணி நேரம் காடாக்கினியாலும் எரித்தல் வேண்டும். எரிக்கப்படும் சரக்குகளில் கலந்துள்ள கந்தகத்தின் அளவிற்கேற்ப அவை சீக்கிரமாகவோ, தாமதித்தோ உருக ஆரம்பிக்கும். உருகிய பின் கந்தகம் மஞ்சள் புகையாக வெளியேறும். தீயை மேலே குறிப்பிட்டபடி அதிகரித்த கமலாக்கினியாலும், காடாக்கினியாலும் எரிக்க வேண்டும். இவ்வாறு எரிக்கும்போது நீல நிற சுவாலைகள் வெளிப்படுவது முழுவதும் நின்றவுடன் இரும்புக் கம்பியைக் கலங்களின் வாய்வழியே செலுத்தி எடுத்துப் பார்க்கவும்.
உட்சென்ற பாகம் வெண்ணிறமாகத் தோற்றம் அளிக்கும். கந்தகம் நன்கு எரிந்து விடுவதால் அது சம்பந்தப்பட்ட கம்பியில் தோன்றுவதில்லை. இந்நிலை தான் செந்தூரம் பதங்கிக்கும் நிலை. இச்சமயத்தில் சிறிதும் தாமதமின்றி கலங்களின் வாய்க்குப் பொருத்தமான மூடிகளை வைத்து மூடி சீலை செய்யவும். இவ்விதமாக சீலை செய்த பின்னர் ஒன்று முதல் 2 மணி நேரம் வரை தொடர்ந்து காடாக்கினியால் எரித்துப் பின்னர் நிறுத்தவும். தானாகவே குளிர்ந்த பின்னர் அக்குப்பிகளை அல்லது எனாமல் கிண்ணங்களை எடுத்துச் சீலைகளைப் பிரித்து கிண்ணங்களின் மேல் பதிந்துள்ள செந்தூரத்தை உலோகத் தகட்டால் மெல்லத் தட்டி பெயர்த்தெடுத்து செந்தூரத்தை சேகரித்து கல்வத்திலிட்டு நன்கு அரைத்து வைக்கவும்.

2. புடமிடும் முறை:
புடமிட்டுச் செய்யப்படும் செந்தூரங்களை பற்பங் களுக்குக் கூறப்பட்டுள்ள செய்முறையில் புடமிட வேண்டும். அதாவது சாறுகளையோ அல்லது கியாழங் களையோ குறிப்பிட்ட கால அளவு வரை நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின்னர் வில்லைகளை முறைப்படி அகல்களில் வைத்து மேல் அகல் மூடி சீலை செய்து வைக்கவும்.
புடமிட நிர்ணயித்துள்ள அளவு வரட்டிகளில் பாதி அளவைக் குழியில் பரப்பி, அதன் மேல் நடுவே சீலை செய்து உலர்ந்த அகல்களை வைத்து அதன் மேல் மிஞ்சியுள்ள வரட்டிகளைப் பரப்பி மூடி மேல்பாகத்தில் நான்கு பக்கங்களிலும் தீயிடவும். புடம் நன்கு ஆறிய பின்னர் அகல்களை எடுத்து சீலையைப் பிரித்து அதனுள் இருக்கும் வில்லைகளை எடுத்து கல்வத்திலிட்டு நன்கு அரைத்து வைக்கவும்.
பொதுவாக செந்தூரங்கள் எல்லாம் சிவப்பாக இருந்தாலும் கெளரி சிந்தாமணி செந்தூரம் மட்டும் பூலாம்பழ நிறமாக இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள இருவகைச் செந்தூரங்களைத் தவிர எரிப்புச் செந்தூரம், வறுப்புச் செந்தூரம், சூரிய புடச் செந்தூரம் என்ற வகைகளும் உண்டு.

* பண்பும் பாதுகாப்பும் :
இவற்றின் பண்புகள் பெரும்பாலும் பற்பங்களை ஒத்திருக்கும். செந்தூரங்களுக்கான சோதனை முறைகளும் பெரும்பாலும் பற்பங்களுக்கு உள்ளவற்றைப் போன்றவை யாகும். செந்தூரங்கள் பெரும்பாலும் சிவப்பாகவே இருக்கும். விதி விலக்குகளும் உண்டு.
இவற்றைச் சுத்தமான ஈரப்பதமற்ற கண்ணாடிக் குடுவைகளில் காற்றுப்புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும். செந்தூரங்கள் 75 ஆண்டுகள் வரை வன்மையுடையன.