Contact Us

Tips Category View

பற்பங்கள் தயாரிப்பு முறைகள்

பற்பம் என்பதற்கு நீறு அல்லது சாம்பல் என்று பொருள். இச்செய்முறையால் பக்குவத்தப்பட்டவைகள் பெரும்பாலும் வெண்ணிறமாகவே அமைவதால் இவைகள் இப்பெயரைக் கொண்டே குறிப்பிடப்படுகின்றன. பற்பங்கள் புடமிட்டு தயாரிக்கப்படுகின்றன.
மிகக் கடினமானவையும் எளிதில் உட்கொள்ள முடியாததுமான உலோகங்கள், பாஷாணங்கள், உபசரங்கள் போன்றவற்றைச் சில மூலிகைச் சாறுகளாலாவது, உப்புப் புகை நீரினாலாவது (திராவகத்தில் அரைத்து புடமிட்டாவது) எரித்தாவது, ஊதியாவது, வெளுக்கும்படி செய்து எடுத்துக் கொள்வதே இதன் செயல்முறையாகும்.

செய்முறை :
பற்பம் செய்யும் செயல்முறை சோதனம் (சுத்தி செய்தல்) மாரணம் (மடியச் செய்தல்) என இரு பிரிவுகளாகக் கொண்டது.

புடமிட வேண்டிய பொருட்களில் இயற்கையாகவும், பலவிதமான செயற்கைக் காரணங்களினாலும் அமைந் துள்ள கசடுகளை சில குறிப்பிட்ட செயல்முறைகளுக்கு உட்படுத்தி அகற்ற சோதனம் (சுத்தி செய்தல் (அல்லது) தூய்மையாக்கல்) என்றும் மேற்படி தூயதாக்கியவற்றை பற்பல மூலிகைச் சாறுகள் (அல்லது) உப்பப் புகை நீர்கள் (திராவகங்கள்) ஜெயநீர்களால் அரைத்து முறைப்படி பன்முறை புடமிட்டு நீராக்குவதை மாரணம் (மடியச் செய்தல்) என்றும் கூறுவர். பழுக்கக் காய்ச்சி குறிப்பிட்ட திரவத்தில் தோய்த்தல், ஊற வைத்தல் என பொருள்களுக்கேற்ப சோதனம் பல வகைப்படும். ஆனால் பற்பமாக மாற்றும் மாரண முறை சற்றேறக்குறைய எல்லாப் பொருட்களுக்கும் பொதுவானதே. ஏனெனில் அவைகள் எல்லாமே புடமிடும் செயல்முறைகளால் பற்பமாக்கப்படுகின்றன. முதலில் சுத்தி செய்த பொருட்களைக் கல்வத்திலிட்டு நன்கு அரைப்பதற்கு ஏற்ற வண்ணம் நன்கு பொடித்துச் சலித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றைக் கல்வத்திலிட்டு செய்முறையில் குறிப்பிட்ட கால அளவு வரை அரைத்துச் சிறிய வில்லைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். வில்லைகள் ஈரம் இருந்தால் பற்பத்தின் நிறம் சரியாக அமையாது. நன்கு உலர்ந்த வில்லைகளை மண்அகலில் பரப்பி அதே அளவுள்ள மற்றோர் அகலால் மேலே கவிழ்த்து மூடி அவைகளை சேரும் இடத்தை சீலை மண் கொண்டு பூசி உலர்ந்த பின் உலோகங்கள், பாஷாணங்கள், உபசரங்கள் போன்றவற்றின் உருகு நிலைக்கேற்ப நிர்ணயித்துள்ள புடங்களில் அமைத்துப் பக்குவப்படுத்த வேண்டும். (புடமிடல் வேண்டும்) புடம் நன்கு ஆறிய பின்னரே அகல்களையும் அவற்றினுள் இருக்கும் மருந்துப் பொருள்களையும் பிரித்தெடுத்தல் வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் கல்வத்திலிட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். புடமிட்ட வில்லைகளை அகலில் அடுக்கும் போது அவற்றைக் குவியலாகவோ அல்லது இரண்டு அடுக்குகளுக்கு அதிகமாகவோ அமைத்தல் கூடாது. அப்போதுதான் வெப்பம் நன்கு செயல்படும். பற்பமும் நன்கு அமையும். பயன்படுத்தும் அகல்கள் மருந்தின் அளவுக்குத் தேவையான அளவைவிட மிகப் பெரியதாகவும் அதிக ஆழம் உள்ளதாகவும் இருத்தல் கூடாது. அரைப்பின் தரத்திற்கேற்பவே பற்பங்களின் நிறம், குணம், நுண்மை முதலியன சிறந்து அமையும். ஆதலால் அவற்றை நன்கு அரைக்க வேண்டியது அவசியமாகிறது." மிதமான காற்றோட்டமுள்ள இடங்களைத் தேர்வு செய்து அங்கு பூமியில் வட்ட வடிவமான குழிகளை வெட்டி குழிகளை மண் சரியாத வண்ணம் அவற்றைச் சுற்றிலும் செங்கற்களைக் கொண்டு கட்டி எரிபொருளை அமைத்துப் புடமிட வேண்டும். புடங்களில் வரட்டிகளே எரிபொருளாக உபயோகிக்கப் படுகின்றன. எனினும் சில பற்பங்களுக்கு சில வகை மரப்பட்டைகள் ஆட்டுச் சாணம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டுமென நூல்களில் கூறப்பட்டுள்ளன. தற்போது கிடைக்கும் வரட்டிகளில் மண் போன்ற கலப்படங்கள் அதிகமாயுள்ளன. ஆகையால் இம்முறை களில் பொருட்களுக்கு ஏற்ப வெப்ப நிலையை ஆராய்ந்து நிர்ணயித்து அதற்கேற்ப எண்ணிக்கையைக் கூட்டியோ குறைவாகவோ வரட்டிகளை அவ்வப்போது உபயோகிக்க வேண்டும். இதில் அனுபவம் இன்றியமையாததாகும். பழக்கத்தின் வாயிலாகவே நிதானம் ஏற்படும். இவ்விதம் நிர்ணயித்த அளவு வரட்டிகளின் அளவில் பாதிப் பகுதியைக் குழியில் பரப்பி அடுக்கி அவற்றிற்கு நடுவே சீலை செய்து உலர்த்திய அகல்களை வைத்து அதன் மேல் எஞ்சியுள்ள வரட்டிகளைப் பரப்பி மேல்பாகத்தில் தீயிடவும். மூடி கடும் வெப்பத்தைப் பொறுக்காத கந்தகம், தாளகம் போன்றவைகளைக் குறிப்பிட்ட சில தாவரச் சாம்பல்களில் மணல் மறைத்துப் புடமிடுவது வழக்கம். அவ்விடங்களில் செய்முறையில் குறிப்பிட்டுள்: சாம்பலை அகல்களில் பரப்பி அதன் மேல் உலர்ந்த வில்லைகளை வைத்து அதன் மேல் அதே சாம்பல் கொண்டு மூடி மறைத்து மேலே அகல் இட்டு மூடி, சீலை செய்து, உலர்ந்த பின் புடமிட வேண்டும். ரசம், லிங்கம், வெள்ளைப் பாஷாணம், கந்தகம், தாளகம், மனோசீலை போன்ற வெப்பம் தாங்காத பொருட்களைச் சேர்த்து வேறு பொருட்களை பற்பமாக்கும் போது அகல்கள் சேருமிடத்தை நன்கு சீலைமண்ட பூசி புடமிடும் போது அவற்றை வீணாக்காமல் வெளியேற விடாது செய்திடல் வேண்டும். பொருட்களின் உருகுநிலை மற்றும் ஆவியாகும் நிலைகளுக்கு ஏற்பவே புடங்கள் வேறுபடுகின்றன. தங்கம், வெள்ளி, காரீயம், வெள்ளீயம், துத்தநாகம் இவைகள் பற்பமாக குறைந்த அளவு வெப்பம்தான் தேவைப்படு கிறது . தீ அதிகமானால் அவைகள் கற்கள் போல் கடினமாகிவிடுகின்றன. எனவே சிறு தீயில் ஆரம்பித்து அதிகத் தீயைத் தாங்கும் அளவிற்கு அவற்றை முறைப்படி பக்குவப்படுத்த வேண்டும். அப்பிரகம், அயம், மண்டூரம், பொன்னிமிளை, காந்தம், தாமிரம் போன்றவைகளுக்குத் தீவிரமாக அதிக வெப்பம் தேவைப்படுகிறது. ரசம், தாளகம் போன்றவைகளுக்கோ மிகமிகக் குறைந்த உஷ்ணமே தேவைப்படுகிறது. அப்பிரகம், தாமிரம், நாகம், அயம், தங்கம், வெள்ளி போன்றவை புடங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக குணத்தில் சிறந்து விளங்குகின்றன. பவளம், முத்து, முத்துச் சிப்பி, பலகரை, சங்கு, ரத்தினங்கள், உபரத்தினங்கள் ஆகியன புடங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக நற்குணங்கள். இழக்கின்றன. முத்துச் சிற்பி, சங்கு, பலகரை போன்ற பற்பங்களின் காரம் சிறிது அடங்க அவற்றை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி பொடித்து உபயோகித்தல் வேண்டும். இது அவற்றிலுள்ள நாக்கைப் புண்ணாக்கும் சுண்ணாம்புக்குச் சமமான கூரிய சக்தியைக் குறைக்கும்.