Contact Us

Tips Category View

சூரணங்கள் தயாரிப்பு

நன்கு உலர்ந்த மருந்துச் சரக்குகள் நன்கு பொடி யாக்கப்பட்ட நிலையில் சூரணங்கள் என அழைக்கப்படும். சூரணங்கள் உட்கொள்ளவும் மேற்பூச்சாகவும் நசியமிடவும். பயன்படுத்தப்படுகின்றன.

உலர்ந்த சரக்குகளை மீண்டும் உலர்த்தாமலும் ஈரச் சரக்குகளானால் உலர்த்தியும் வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் உலக்கையால் நன்கு தூளாக்கிக் கொள்ள வேண்டும்.

சில சரக்குகளை இலேசாக வறுத்துக் கொள்வதால் அவற்றின் நொறுங்கும் தன்மை மிகுவதோடு அவற்றின் நறுமணமும் மிகைப்படுகின்றன.

சூரணங்களில் சேர்க்கப்படும் மருந்துச் சரக்குகளை தனித்தனியே இடித்துச் சலித்து பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக்கிக் கலந்து சூரணமாக்கிக் கொள்ள வேண்டும்.

சூரணம் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மிகப் பழமையானவையாகவோ, இயற்கையான நிறம் மங்கியவையாகவோ மணம் சுவையில் இயற்கைக்குப் புறம்பாகவோ, பூச்சி அரித்ததாகவோ, காளான் பூத்ததாகவோ இருத்தல் கூடாது.

சர்க்கரை, கற்கண்டு, கற்பூரம், காவிக்கல், மூசாம்பரம், திராட்சை, பேரிச்சங்காய், பெருங்காயம், வெங்காயம், படிகாரம் உப்பு வகைகள் போன்றவற்றை எல்லா சரக்குகளுடன் பொடித்தல் கூடாது. அவைகளைத் தனித்தனியே இடித்துப் பொடித்து சலித்துக் கடைசியில் சேர்க்க வேண்டும்.

சதாவரி (தண்ணீர் விட்டான் கிழங்கு) சீந்தில் கொடி போன்றவைகளைப் பசை போலரைத்து உலர்த்திச் சேர்க்க வேண்டும். திப்பிலியை சற்றே வறுத்து சேர்க்க வேண்டும்.

பின்னர் எல்லாவற்றையும் ஒன்றுபடக் கலந்து தூய்மையான ஈரப்பதமற்ற காற்றுப்புகாத பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியில் மூடி வைத்தல் வேண்டும். சூரணங்கள் கட்டிகளாகவோ ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டோ ஈரம் படிந்தோ இருத்தல் கூடாது. எவ்வளவுக்கெவ்வளவு நுண்துகளாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மருந்தின் பயனும் அதிகமாக இருக்கும்.

பாதுகாப்பும் காலக்கெடுவும் :
சூரணங்களை நன்கு பரப்பி சூடு ஆற வைத்து கலந்து கொண்ட பின்னரே சிறு சிறு பொட்டலங்களில் அடைத்தல் வேண்டும்.இவற்றை நல்ல மூடியுடன் கூடிய ப்ளாஸ்டிக் டப்பாக்கள், கண்ணாடி பாட்டில்கள், பாலீதின் பைகள் போன்றவற்றில் அடைத்து சீல் செய்துவிட வேண்டும்.
சூரணங்கள் மூன்று மாதம் வரை வன்மை உடையன.