குடிநீர் கஷாயம் அல்லது சாறு வகைகளுடன் சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சிப் பதமும் மணமும் வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள சூரணங்களைச் சேர்த்து நன்றாகக் கிளறி மிதமான சூட்டில் நெய்யையும் ஆறிய பின்னர் தேனையும் விட்டுக் கிண்டி எடுத்து வைத்துக் கொள்வதாகும். இலேகியத்தில் சேர்க்கப்படும் தேன், சர்க்கரை, பனைவெல்லம் போன்ற இனிப்புப் பொருட்கள் இலேகியத்திற்கு சுவையூட்டுவதுடன் இலேகியத்தில் கலந்துள்ள மூலப் பொருட்களின் மருத்துவ சக்தியை ஊக்குவிக்கும் உபகாரமாகவும் செயல்படுகிறது.
இலேகியத்திற்கான பாகு தயாரிக்க மிதமான தீயையே பயன்படுத்த வேண்டும்.
பாகுபதம் அறிய:
1. பாகை துடுப்பால் தொட்டு எடுக்க அதிலிருந்து தொடர்ச்சியாக மெல்லிய நூலால் இணைக்கப் பெற்றது போன்ற தோற்றத்துடன் கீழே விழும்.
2. மேற்படி பாகை விரல்களுக்கிடையில் வைத்து அழுத்தி பின் விரல்களால் பிரிக்க அக்கலவை நூல் போன்று இரு விரல்களையும் பிணைத்து நிற்கும்.
3. சரியான பாகுபதத்தை நிச்சயித்த பிறகு சரக்குகளை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அந்தச் சமயத்தில் பாத்திரத்தை அடுப்பிலிருந்து எடுத்து விட வேண்டும்.
4. மேலும் கலவையை நீண்ட நேரம் சூடு செய்வதால் பாகுபதம் மாறிவிடுவதுடன் லேகியமும் கல்போல் இறுகிவிடும். சர்க்கரைப் பாகிலுள்ள நீர் முழுவதும் சுண்டிவிடுவதால் சர்க்கரை மணல் போன்ற படிவமாக மாறிவிடுகிறது.
5. இளஞ்சூட்டில் நெய்யையும் அதன் பிறகு தேனையும் சேர்க்க வேண்டும்.
6. இலேகியம் மிகவும் கடினமாகவோ தடித்த திரவமாகவோ இருத்தல் கூடாது. இரு விரல்களுக்கிடையில் உருட்டிப் பார்க்கும் பொழுது விரல்களில் ஒட்டக் கூடாது. விரல் ரேகை பதியுமளவிற்கு மென்மையாக இருக்க வேண்டும்.
7. உலோகங்களைப் பற்பமாக்கியும் சேராங்கொட்டை போன்ற சரக்குகளை சுத்தி செய்து லேகியத்தில் சேர்க்க வேண்டும்.
8. லேகியத்தின் நிறம், மணம், சுவை ஆகியன அதில் சேரும் மருந்துப் பொருட்களையே பெரிதும் பொருத்ததாகும். இலேகியங்கள் நல்ல முறையில் தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தால் ஓர் ஆண்டு வரை கெடாமல் இருக்கும். காளான் பூத்தல், நொதித்தல், விபரீதமான மணம் வீசுதல் ஆகியன லேகியம் சீர்கேட்டின் அறிகுறிகளாகும்.