பற்பம் என்பதற்கு நீறு அல்லது சாம்பல் என்று பொருள். இச்செய்முறையால் பக்குவத்தப்பட்டவைகள் பெரும்பாலும் வெண்ணிறமாகவே அமைவதால் இவைகள் இப்பெயரைக் கொண்டே குறிப்பிடப்படுகின்றன. பற்பங்கள் புடமிட்டு தயாரிக்கப்படுகின்றன.
மிகக் கடினமானவையும் எளிதில் உட்கொள்ள முடியாததுமான உலோகங்கள், பாஷாணங்கள், உபசரங்கள் போன்றவற்றைச் சில மூலிகைச் சாறுகளாலாவது, உப்புப் புகை நீரினாலாவது (திராவகத்தில் அரைத்து புடமிட்டாவது) எரித்தாவது, ஊதியாவது, வெளுக்கும்படி செய்து எடுத்துக் கொள்வதே இதன் செயல்முறையாகும்.
செய்முறை :
பற்பம் செய்யும் செயல்முறை சோதனம் (சுத்தி செய்தல்) மாரணம் (மடியச் செய்தல்) என இரு பிரிவுகளாகக் கொண்டது.
புடமிட வேண்டிய பொருட்களில் இயற்கையாகவும், பலவிதமான செயற்கைக் காரணங்களினாலும் அமைந் துள்ள கசடுகளை சில குறிப்பிட்ட செயல்முறைகளுக்கு உட்படுத்தி அகற்ற சோதனம் (சுத்தி செய்தல் (அல்லது) தூய்மையாக்கல்) என்றும் மேற்படி தூயதாக்கியவற்றை பற்பல மூலிகைச் சாறுகள் (அல்லது) உப்பப் புகை நீர்கள் (திராவகங்கள்) ஜெயநீர்களால் அரைத்து முறைப்படி பன்முறை புடமிட்டு நீராக்குவதை மாரணம் (மடியச் செய்தல்) என்றும் கூறுவர். பழுக்கக் காய்ச்சி குறிப்பிட்ட திரவத்தில் தோய்த்தல், ஊற வைத்தல் என பொருள்களுக்கேற்ப சோதனம் பல வகைப்படும். ஆனால் பற்பமாக மாற்றும் மாரண முறை சற்றேறக்குறைய எல்லாப் பொருட்களுக்கும் பொதுவானதே. ஏனெனில் அவைகள் எல்லாமே புடமிடும் செயல்முறைகளால் பற்பமாக்கப்படுகின்றன. முதலில் சுத்தி செய்த பொருட்களைக் கல்வத்திலிட்டு நன்கு அரைப்பதற்கு ஏற்ற வண்ணம் நன்கு பொடித்துச் சலித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றைக் கல்வத்திலிட்டு செய்முறையில் குறிப்பிட்ட கால அளவு வரை அரைத்துச் சிறிய வில்லைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். வில்லைகள் ஈரம் இருந்தால் பற்பத்தின் நிறம் சரியாக அமையாது. நன்கு உலர்ந்த வில்லைகளை மண்அகலில் பரப்பி அதே அளவுள்ள மற்றோர் அகலால் மேலே கவிழ்த்து மூடி அவைகளை சேரும் இடத்தை சீலை மண் கொண்டு பூசி உலர்ந்த பின் உலோகங்கள், பாஷாணங்கள், உபசரங்கள் போன்றவற்றின் உருகு நிலைக்கேற்ப நிர்ணயித்துள்ள புடங்களில் அமைத்துப் பக்குவப்படுத்த வேண்டும். (புடமிடல் வேண்டும்) புடம் நன்கு ஆறிய பின்னரே அகல்களையும் அவற்றினுள் இருக்கும் மருந்துப் பொருள்களையும் பிரித்தெடுத்தல் வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் கல்வத்திலிட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். புடமிட்ட வில்லைகளை அகலில் அடுக்கும் போது அவற்றைக் குவியலாகவோ அல்லது இரண்டு அடுக்குகளுக்கு அதிகமாகவோ அமைத்தல் கூடாது. அப்போதுதான் வெப்பம் நன்கு செயல்படும். பற்பமும் நன்கு அமையும். பயன்படுத்தும் அகல்கள் மருந்தின் அளவுக்குத் தேவையான அளவைவிட மிகப் பெரியதாகவும் அதிக ஆழம் உள்ளதாகவும் இருத்தல் கூடாது. அரைப்பின் தரத்திற்கேற்பவே பற்பங்களின் நிறம், குணம், நுண்மை முதலியன சிறந்து அமையும். ஆதலால் அவற்றை நன்கு அரைக்க வேண்டியது அவசியமாகிறது." மிதமான காற்றோட்டமுள்ள இடங்களைத் தேர்வு செய்து அங்கு பூமியில் வட்ட வடிவமான குழிகளை வெட்டி குழிகளை மண் சரியாத வண்ணம் அவற்றைச் சுற்றிலும் செங்கற்களைக் கொண்டு கட்டி எரிபொருளை அமைத்துப் புடமிட வேண்டும். புடங்களில் வரட்டிகளே எரிபொருளாக உபயோகிக்கப் படுகின்றன. எனினும் சில பற்பங்களுக்கு சில வகை மரப்பட்டைகள் ஆட்டுச் சாணம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டுமென நூல்களில் கூறப்பட்டுள்ளன. தற்போது கிடைக்கும் வரட்டிகளில் மண் போன்ற கலப்படங்கள் அதிகமாயுள்ளன. ஆகையால் இம்முறை களில் பொருட்களுக்கு ஏற்ப வெப்ப நிலையை ஆராய்ந்து நிர்ணயித்து அதற்கேற்ப எண்ணிக்கையைக் கூட்டியோ குறைவாகவோ வரட்டிகளை அவ்வப்போது உபயோகிக்க வேண்டும். இதில் அனுபவம் இன்றியமையாததாகும். பழக்கத்தின் வாயிலாகவே நிதானம் ஏற்படும். இவ்விதம் நிர்ணயித்த அளவு வரட்டிகளின் அளவில் பாதிப் பகுதியைக் குழியில் பரப்பி அடுக்கி அவற்றிற்கு நடுவே சீலை செய்து உலர்த்திய அகல்களை வைத்து அதன் மேல் எஞ்சியுள்ள வரட்டிகளைப் பரப்பி மேல்பாகத்தில் தீயிடவும். மூடி கடும் வெப்பத்தைப் பொறுக்காத கந்தகம், தாளகம் போன்றவைகளைக் குறிப்பிட்ட சில தாவரச் சாம்பல்களில் மணல் மறைத்துப் புடமிடுவது வழக்கம். அவ்விடங்களில் செய்முறையில் குறிப்பிட்டுள்: சாம்பலை அகல்களில் பரப்பி அதன் மேல் உலர்ந்த வில்லைகளை வைத்து அதன் மேல் அதே சாம்பல் கொண்டு மூடி மறைத்து மேலே அகல் இட்டு மூடி, சீலை செய்து, உலர்ந்த பின் புடமிட வேண்டும். ரசம், லிங்கம், வெள்ளைப் பாஷாணம், கந்தகம், தாளகம், மனோசீலை போன்ற வெப்பம் தாங்காத பொருட்களைச் சேர்த்து வேறு பொருட்களை பற்பமாக்கும் போது அகல்கள் சேருமிடத்தை நன்கு சீலைமண்ட பூசி புடமிடும் போது அவற்றை வீணாக்காமல் வெளியேற விடாது செய்திடல் வேண்டும். பொருட்களின் உருகுநிலை மற்றும் ஆவியாகும் நிலைகளுக்கு ஏற்பவே புடங்கள் வேறுபடுகின்றன. தங்கம், வெள்ளி, காரீயம், வெள்ளீயம், துத்தநாகம் இவைகள் பற்பமாக குறைந்த அளவு வெப்பம்தான் தேவைப்படு கிறது . தீ அதிகமானால் அவைகள் கற்கள் போல் கடினமாகிவிடுகின்றன. எனவே சிறு தீயில் ஆரம்பித்து அதிகத் தீயைத் தாங்கும் அளவிற்கு அவற்றை முறைப்படி பக்குவப்படுத்த வேண்டும். அப்பிரகம், அயம், மண்டூரம், பொன்னிமிளை, காந்தம், தாமிரம் போன்றவைகளுக்குத் தீவிரமாக அதிக வெப்பம் தேவைப்படுகிறது. ரசம், தாளகம் போன்றவைகளுக்கோ மிகமிகக் குறைந்த உஷ்ணமே தேவைப்படுகிறது. அப்பிரகம், தாமிரம், நாகம், அயம், தங்கம், வெள்ளி போன்றவை புடங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக குணத்தில் சிறந்து விளங்குகின்றன. பவளம், முத்து, முத்துச் சிப்பி, பலகரை, சங்கு, ரத்தினங்கள், உபரத்தினங்கள் ஆகியன புடங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக நற்குணங்கள். இழக்கின்றன. முத்துச் சிற்பி, சங்கு, பலகரை போன்ற பற்பங்களின் காரம் சிறிது அடங்க அவற்றை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி பொடித்து உபயோகித்தல் வேண்டும். இது அவற்றிலுள்ள நாக்கைப் புண்ணாக்கும் சுண்ணாம்புக்குச் சமமான கூரிய சக்தியைக் குறைக்கும்.
1. பொதுவாகப் பற்பங்கள் வெண்ணிறமுடையவை. விதி விலக்குகளும் உண்டு. உதாரணமாக தங்க பற்பம் இள மஞ்சள் நிறமுடையது.
2. பற்பங்கள் பெரும்பாலும் மணம், சுவை அற்றன.
3. உலோகப் பளபளப்பு சிறிதும் இல்லாமல் இருக்க வேண்டும்.
4. பற்பங்கள் நாட்கள் ஆக ஆக சக்தி வாய்ந்தவைகள் ஆகிவிடுகின்றன. பண்பியல் சோதனைகளை பற்பங்கள் நன்கு முடித்துள்ளனவோ என்று அறிய கீழ்க்காணும் சோதனை முறைகள் சித்த மருத்துவ நூலில் வரையறுக்கப் பட்டுள்ளன.
******************************************************************************
1. பற்பத்தில் உலோகத் தலுக்கு மினுமினுப்பு சிறிது கூட இருத்தல் கூடாது. அதாவது
2. பற்பத்தை ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் இட்டு தேய்த்தால் பற்பம் விரல்களின் ரேகை இடுக்குகளில் பதிய வேண்டும். அதாவது அவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும்.
3. சிறிதளவு பற்பத்தை நீரின் மேலிட்டால் உடனே அது நீரில் மூழ்கக் கூடாது. தண்ணீரில் மிதக்கும். மேற்படி பற்பத்தின் மீது நெல் போன்ற தானிய மணியை மெதுவாக வைக்க அதையும் சுமந்து கொண்டு பற்பம் நீரில் மூழ்காமல் மிதந்து வர வேண்டும்.
4. பற்பத்தைத் தீயிலிட்டு ஊதினால் அதனின்றும் பற்பம் தன்னுடைய பழைய மூலப்பொருள் நிலைக்குத் திரும்பக் கூடாது.
5. பற்பத்திற்கு பேதமான (வித்தியாசமான) சுவை இருக்கலாகாது. பாதுகாப்பு முறையும் காலக் கெடுவும்: சுத்தமான ஈரப்பதமற்ற கண்ணாடிக் குடுவையில் காற்றுப்புகா வண்ணம் இவற்றை மூடி வைத்தல் வேண்டும். பற்பங்கள் நூறு ஆண்டுகள் வரை எண்ணம் உடையவை.
தேவையான பொருட்கள்:
1. சுத்தித்த ஆமை ஓடு-300 கி
2. உத்தாமணிச் சாறு-தேவையான அளவு
செய்முறை :
சுத்தி செய்த ஆமை ஓட்டை ஒன்றிரண்டாய் உடைத்து ஒரு சட்டியிலிட்டு உத்தாமணிச் சாற்றை நிரப்பி அகலால் மூடி சீலை செய்து 100 விரட்டிகளைக் கொண்டு புடமிடவும். ஆறிய பிறகு ஆமை ஓட்டைப் பொடித்து கல்வத்திலிட்டு உத்தாமணிச் சாற்றால் நன்கு அரைத்துவில்லைகள் தட்டி உலர்ந்த பின் 100 வரட்டிகளைக் கொண்டு புடமிட்டெடுக்க வெண்ணிற பற்பமாகும். தேவையானால் மேலும் ஒன்றிரண்டு புடங்களிடலாம்.'
அளவு :
100 - 200 மி.கி. தேன் (அல்லது) பசும்பால் மற்றும் பொடுதலைக் குடீநீர், பேய்மிரட்டி இலைக் குடிநீர் மற்றும் ஓமக் குடிநீருடன் தினம் இரு வேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
இதனால் மாந்தம், குழந்தைகளின் மாந்த பேதி குணமாகும்.
தேவையானவை:
1. கந்தகம் -பற்பம் செய்யத் தேவையான அளவு
2. பால் - சுத்தி செய்யத் தேவையான அளவு
3. குப்பைமேனிச்சாறு -தேவையான அளவு
4. மருதம்பட்டை செயநீர் - தேவையான அளவு
5. மருதம்பட்டை சாம்பல் - தேவையான அளவு
செய்முறை :
சுத்தி செய்த கந்தகத்தை ஓர் அகலில் வைத்து மருதம்பட்டை செய்ய நீரால் சுருக்கிடவும். இது ஓரளவுக்கு கட்டாகும். பின் கந்தகத்தைக் கல்வத்திலிட்டு குப்பைமேனிச் சாற்றால் அரைத்து வில்லைகள் தட்டிஉலர்ந்த பின் வில்லைகளை ஒரு அகலில் மருதம்பட்டை சாம்பலுக்குள் மறைத்து சிறு தீயால் எரிக்கவும். கந்தக வாசனை வரும்போது எரிப்பை நிறுத்திக் குளிர வைக்கவும். ஆறிய பின் வில்லைகளை எடுத்துத் திருப்பி வைத்து மறுபடியும் சிறு தீயால் எரிக்கவும். பின் குளிர்ந்த வில்லைகளை எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து வைக்கவும்.
அளவு :
25 -50 மி.கி. வரை நெய் அல்லது எண்ணெயுடன் தினம் இரு வேளைகளுக்குக் கொடுக்கவும்.
தீரும் வியாதிகள் :
சொறி, சிரங்கு, தோல் மரப்பு, தேமல், தேகப்பட்டை, குஷ்டம், பௌத்திரம் ஆகியவை குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை குங்கிலியம்-700 கி
2. இளநீர்-7 எண்ணிக்கை
செய்முறை:
இளநீரை ஒரு பாத்திரத்திலிட்டு அதில் 700 கிராம் வெள்ளை குங்கிலியத்தை சேர்த்து அடுப்பிலேற்றி எரித்துக் கொண்டே கிளறி வர குங்கிலியம் உருகும். உருகிய குங்கிலியத்தை ஆற வைத்து உடைத்துப் போட்டு அதில் இளநீர் சேர்த்து முன்போல் ஏழுமுறைகள் செய்து எடுத்து கல்வத்திலிட்டு பொடித்து வைக்கவும்.
அளவு:
200-500 மி.கி. வரை நெய் அல்லது வெண்ணெய் அல்லது இளநீருடன் மற்றும் சீத வீரிய மூலிகைகளின் சாறுகள் (அல்லது) குடிநீருடன் தினம் இருவேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
வெள்ளை, நீர் எரிவு, நீர்க்கட்டு, வெட்டை, சீதபேதி இவை குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. முத்துச்சிப்பி-150 கி
2. ஆடாதோடா இலைச்சாறு-தேவையான அளவு
3. நொச்சியிலைச் சாறு-தேவையான அளவு
4. நிலப்பனைச் சாறு-தேவையான அளவு
செய்முறை :
சுத்தி செய்த முத்துச் சிப்பியைக் கல்வத்திலிட்டு ஆடாதோடா இலைச்சாறு கொண்டரைத்து ஒரு புடம், நொச்சி இலைச்சாறு கொண்டரைத்து ஒரு புடம், நிலப்பனைச் சாறு கொண்டு அரைத்து ஒரு புடம் இடவும். 150 கிராம் எடையுள்ள முத்துச் சிப்பியைப் புடமிட 30 வரட்டிகள் போதுமானது.
அளவு :
200-400 மி.கி. வீதம் நெய் அல்லது வெண்ணெயுடன் தினம் இருவேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
மூலம், பவுத்திரம் முதலியவை குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. நண்டுக்கல் (அ) கல்கண்டு- தேவையான அளவு
2. கல் சுண்ணாம்பு-தேவையான அளவு
3. முள்ளங்கிச் சாறு-தேவையான அளவு
4. பூநீறு-தேவையான அளவு
5. சிறு பீளைச் சாறு-தேவையான அளவு
செய்முறை :
கல்நண்டை, கல் சுண்ணாம்பு தெளிவு நீர் மற்றும் பூநீறு கரைத்த நீர் இவற்றில் 3 மணி நேரம் கொதிக்க வைத்து தண்ணீரில் அலசி, சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
பின் சுத்தி செய்த கல்நண்டை முள்ளங்கிச் சாற்றில் 3 நாட்கள் அரைத்து புடமிடவும்.
பின் சிறுபீளை சாற்றில் 3 நாட்கள் புடமிடவும். பின் எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அளவு:
200 - 400 மி.கி. வீதம் முள்ளங்கி சாறு அல்லது சிறு பீளைச் சாற்றில் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள் :
நீர்க்கடுப்பு நீங்கும். சிறுநீரகக் கல்லைக் கரைத்து, சிறுநீர் நன்கு பிரியும்.
தேவையான பொருட்கள்:
1. நத்தை-புடமிடத் தேவையான அளவு
2. துத்தியிலைச்சாறு-தேவையான அளவு
செய்முறை :
நத்தைகளை அழுக்கு போக சுத்தம் செய்து ஒரு பானையில் பாதி அளவுக்கு அவற்றை நிரப்பி பானையை வாய்க்குப் பொருத்தமான ஒரு அகலைக் கொண்டு மூடி சீலை செய்து உலர்ந்த பின் புடமிடவும்.
ஆறிய பின் பானையில் இருக்கும் நத்தையின் சாம்பலை எடுத்துக் கல்வத்திலிட்டுத் துத்தியிலைச் சாற்றால் நன்கு அரைத்து வில்லைகளைத் தட்டி உலர்ந்த பின் புடமிடவும். இதே போல் பற்பம் வெண்மையாகும் வரை இரண்டு அல்லது மூன்று முறை புடமிடவும்.
அளவு :
200 -400 மி.கி. வீதம் நெய் அல்லது வெண்ணெயுடன் தினமும் இருவேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
இரத்த மூலம், சீதபேதி, ஆசனக் கடுப்பு முதலியவை நீங்கும்.
தேவையான பொருட்கள் :
1. நற்பவளம்- 35 கி
2. கரும்பு ரசம் -420 கி
செய்முறை:
சுத்தி செய்த நற்பவளத்தினைக் கரும்பு ரசம் விட்டு நன்றாக 7 நாள் அரைத்து வில்லை செய்து, உலர்த்தி ஓட்டிலிட்டு சீலை செய்து 34 வரட்டியில் புடமிட்டு, ஆறவிட்டு எடுக்க பற்பமாகும். 4
அளவு:
50 மி.கி. தேனில் உட்கொள்ளவும்.
தீரும் நோய்கள் :
ஈளை,கபம்,விக்கல், சுரம், சுவாசம் இவை தீரும்.
தேவையான பொருட்கள்:
1. பலகரை-1.1 கி.கி.
2. எலுமிச்சம் பழம்-50
செய்முறை :
சுத்தி செய்த பலகரையைக் கல்வத்திலிட்டு 50 எலுமிச்சம் பழங்களின் சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின் 150 வரட்டிகளைக் கொண்டு புடமிடவும். இவ்வாறு 2 அல்லது 3 புடங்களிட பலகரை வெண்ணிற பற்பமாகும்.
அளவு :
50 -100 மி.கி. வரை நெய் அல்லது வெண்ணெயுடன் தினமும் இருவேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
வெட்டை, மேகச்சூடு, நீர்க்கட்டு, சூலை, சதையடைப்பு, விஷம், வயிறு விஷமித்தல் போன்ற நச்சு நிலைகள் நீங்கும்.
தேவையான பொருட்கள்:
1. நத்தை -பற்பம் செய்யத் தேவையான அளவு
2. குமரிச் சாறு -பற்பம் செய்யத் தேவையான அளவு
3. கரிசாலைச்சாறு - பற்பம் செய்யத் தேவையான அளவு
செய்முறை :
நத்தைகளை அடிகனத்த சட்டியிலிட்டு உலையில் வைத்து ஊதி நாகம் உருகும் போது கரிசாலைச் சாற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நாகம் பொடியாகும் வரை வறுத்து எடுக்கவும். இந்த நாகப்பொடியைக் கல்வத்தி லிட்டு குமரிச்சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின் புடமிடவும். இதே போன்று மூன்று அல்லது நான்கு புடங்களிட பச்சை நிறம் மாறி பற்பமாகும்.
அளவு:
200 - 400 மி.கி. வீதம் வெண்ணெய் அல்லது நெய்யுடன் தினம் இரு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
பௌத்திரம், பேதி, மூலம், இளைப்பிருமல், இருமல் ஆகியன குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. சுத்தி செய்த படிகாரம்-300 கி
2. கோழி முட்டையின் வெண்கரு-தேவையான அளவு
செய்முறை :
சுத்தி செய்த படிகாரத்தை கோழி முட்டையின் வெண்கருவால் இருபத்து நான்கு மணி நேரம் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து புகையாதபடி புடமிடவும்.
அளவு:
200 - 300 மி.கி. வீதம் தினம் இரு வேளைகளுக்கு நெய் அல்லது வெண்ணெயுடன் கொடுக்க, வெட்டை, இரத்த மூலம், நீரெரிவு, நீரடைப்பு, சதையடைப்பு, பெரும்பாடு, வாய்ப்புண் ஆகியவை குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. மான் கொம்பு-300 கி
2. அகத்தி இலைச்சாறு -தேவையான அளவு
செய்முறை :
மான் கொம்புகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு சட்டியிலிட்டு அகத்தி இலைச்சாற்றை ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊ வைத்து தண்ணீர் விட்டு கழுவி எடுக்கவும், இவ்வாறு ஏழு நாட்கள் செய்ய மான் கொம்பு சுத்தியாகும். சுக்கி செய்த மான் கொம்புகளை அகலில் வைத்து மூடி சிலை செய்து 30 வரட்டிகளில் புடமிடவும். ஆறிய பின் அகலைப் பிரித்து மான் கொம்புகளைக் கல்வத்திட்டு அகத்தி இலைச்சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி பின்னர் 30 வரட்டிகளில் ஒன்று (அல்லது) இரண்டு படங்களிட மான் கொம்பு பற்பமாகும்.
அளவு:
200-400 மி.கி. வீதம் வெண்ணெய் (அல்லது) நெய்யுடன் தினமும் இருவேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
இருமல், மார்பு நோய், பித்தத்தால் வந்த நோய்கள். எலும்புருக்கி நோய் போன்ற நோய்கள் நீங்கும். மேலும் இது மார்பு வலிக்கு சிறந்த மருந்து.
தேவையான பொருட்கள்:
1. கற்பூர சிலாசத்து-300 கி
2. சிறு செருப்படைச் சாறு-தேவையான அளவு
செய்முறை :
சுத்தி செய்த கற்பூர சிலாசத்தைக் கல்வத்திலிட்டு சிறு செறுப்படைச் சாற்றால் நன்கு அரைத்து வில்லைகள் தட்டி உலர்ந்த பின் 50 வரட்டிகளில் புடமிடவும். இவ்வாறு மூன்று புடமிட சிலாசத்து பற்பமாகும்.
அளவு :
0.5 கி-1 கி. வீதம் வெண்ணெய் அல்லது நெய்யுடன் தினம் இரு வேளை கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
மூத்திர எரிவு, வெள்ளை, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு, பித்த வியாதிகள், உடலெரிச்சல் ஆகியவை குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. சங்கு-1 கிலோ
2. எலுமிச்சம் பழச்சாறு-தேவையான அளவு
3. ஆகாயத் தாமரை கல்கம்-5 கிலோ
4. ஆகாயத் தாமரைச் சாறு-தேவையான அளவு
செய்முறை :
சங்கினை எலுமிச்சம்பழச் சாறு கொண்டு சுத்தி செய்த ஆகாயத் தாமரைக் கல்வத்தின் நடுவில் வைத்து உலர்ந்த பின் 50 வரட்டிகளில் புடமிடவும். பின்னர் பொடித்து, ஆகாயத் தாமரை சாற்றில் அரைத்து புடமிட்டு எடுக்கவும்.
அளவு:
100-200 மி.கி. பால் (அல்லது) நெய் (அல்லது) வெண்ணெயுடன் தினமும் இருவேளை கொடுக்க, வயிற்றுக் கோளாறுகள், தோல் நோய்கள் முதலியவை நீங்கும்.
தீரும் நோய்கள் :
நெய்யுடன் உண்ண உடல் பொன்னிற மடையும். துளசிச் சாற்றில் சாப்பிட நெருப்பு போல் காய்கின்ற வெப்பில் ஜன்னி ஏற்பட்டு கபம் அதிகமாவது தீரும். மற்றும் கண் புகைச்சலும் பைத்தியமும் நெய்யில் உட்கொள்ளத்தீரும்.
தேவையான பொருட்கள்:
1. வெங்காரம்-50 கி
2. கோழி முட்டை-தேவையான அளவு
செய்முறை :
சுத்தி செய்த வெங்காரத்தைக் கல்வத்திலிட்டு கோழி முட்டையின் வெண்கருவால் நன்கு அரைத்து வில்லை தட்டி உலர்ந்த பின் 25 வரட்டிகளில் புடமிட வெங்காரம் பற்பமாகும்.
அளவும் தீரும் நோய்களும் :
200 -300 மி.கி. வீதம் வெண்ணெய் நெய் அல்லது இளநீருடன் தினமும் இரண்டு வேளைகளுக்குக் கொடுக்க வெள்ளை, நீர்க்கட்டு சதையடைப்பு, நீரடைப்பு குணமாகும்.