Contact Us

சூரணங்கள் தயாரிப்பு

நன்கு உலர்ந்த மருந்துச் சரக்குகள் நன்கு பொடி யாக்கப்பட்ட நிலையில் சூரணங்கள் என அழைக்கப்படும். சூரணங்கள் உட்கொள்ளவும் மேற்பூச்சாகவும் நசியமிடவும். பயன்படுத்தப்படுகின்றன.

உலர்ந்த சரக்குகளை மீண்டும் உலர்த்தாமலும் ஈரச் சரக்குகளானால் உலர்த்தியும் வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் உலக்கையால் நன்கு தூளாக்கிக் கொள்ள வேண்டும்.

சில சரக்குகளை இலேசாக வறுத்துக் கொள்வதால் அவற்றின் நொறுங்கும் தன்மை மிகுவதோடு அவற்றின் நறுமணமும் மிகைப்படுகின்றன.

சூரணங்களில் சேர்க்கப்படும் மருந்துச் சரக்குகளை தனித்தனியே இடித்துச் சலித்து பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக்கிக் கலந்து சூரணமாக்கிக் கொள்ள வேண்டும்.

சூரணம் செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மிகப் பழமையானவையாகவோ, இயற்கையான நிறம் மங்கியவையாகவோ மணம் சுவையில் இயற்கைக்குப் புறம்பாகவோ, பூச்சி அரித்ததாகவோ, காளான் பூத்ததாகவோ இருத்தல் கூடாது.

சர்க்கரை, கற்கண்டு, கற்பூரம், காவிக்கல், மூசாம்பரம், திராட்சை, பேரிச்சங்காய், பெருங்காயம், வெங்காயம், படிகாரம் உப்பு வகைகள் போன்றவற்றை எல்லா சரக்குகளுடன் பொடித்தல் கூடாது. அவைகளைத் தனித்தனியே இடித்துப் பொடித்து சலித்துக் கடைசியில் சேர்க்க வேண்டும்.

சதாவரி (தண்ணீர் விட்டான் கிழங்கு) சீந்தில் கொடி போன்றவைகளைப் பசை போலரைத்து உலர்த்திச் சேர்க்க வேண்டும். திப்பிலியை சற்றே வறுத்து சேர்க்க வேண்டும்.

பின்னர் எல்லாவற்றையும் ஒன்றுபடக் கலந்து தூய்மையான ஈரப்பதமற்ற காற்றுப்புகாத பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியில் மூடி வைத்தல் வேண்டும். சூரணங்கள் கட்டிகளாகவோ ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டோ ஈரம் படிந்தோ இருத்தல் கூடாது. எவ்வளவுக்கெவ்வளவு நுண்துகளாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மருந்தின் பயனும் அதிகமாக இருக்கும்.

பாதுகாப்பும் காலக்கெடுவும் :
சூரணங்களை நன்கு பரப்பி சூடு ஆற வைத்து கலந்து கொண்ட பின்னரே சிறு சிறு பொட்டலங்களில் அடைத்தல் வேண்டும்.இவற்றை நல்ல மூடியுடன் கூடிய ப்ளாஸ்டிக் டப்பாக்கள், கண்ணாடி பாட்டில்கள், பாலீதின் பைகள் போன்றவற்றில் அடைத்து சீல் செய்துவிட வேண்டும்.
சூரணங்கள் மூன்று மாதம் வரை வன்மை உடையன.

அமுக்கரா சூரணம் (அகஸ்தியர் வைத்திய ரத்தின சுருக்கம் )

தேவையான பொருட்கள்:
1. இலவங்கம்-10 கி
2. சிறுநாகப்பூ-20 கி
3. ஏலம்-40 கி
4. மிளகு-80 கி
5. திப்பிலி-160 கி
6. சுக்கு-320 கி
7. அமுக்கரா-640 கி
8. சர்க்கரை-1280 கி

செய்முறை :
இவற்றைத் தனித்தனியே பொடித்துச் சலிக்கவும். சர்க்கரையைத் தனியே பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்."

தீரும் நோய்கள் :
தினம் இருவேளை 1-2 கிராம் வரை தேன், பால் அல்லது வெந்நீருடன் கொடுக்க ஈரல் நோய், குத்து வாய்வு, வெள்ளை, வறட்சி, கைகால், எரிவு, கபம், இரைப்பு, இளைப்பு, சயம், விக்கல், பாண்டு ஆகியன தீரும். உடல் பருக்கும்.
 

அக்கினிச் சூரணம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. கொடிவேலி வேர்-35 கி
2. திரிகடுகு-35 கி
3. ஓமம்-35 கி
4. சிறுதேக்கு-35 கி
5. ஆனைத் திப்பிலி-35 கி
6. கோஷ்டம்-35 கி
7. இந்துப்பு- 35 கி
8. பெருங்காயம்-70 கி
9. வசம்பு சுட்ட கரி-70 கி
10. கடுகு-70 கி
11. சர்க்கரை-455 கி

தயாரிக்கும் விதம் :
1-11 வரையுள்ள சரக்குகளையும் சூரணித்து அனைத்து சூரணங்களையும் சேர்த்து கலந்து வைக்கவும்.

தீரும் நோய்கள் :
நீரில் சாப்பிட மாந்தம், கழிச்சல் தீரும். தேனில் சாப்பிட சன்னி மற்றும் சீதளமும், பனை வெல்லத்தில் சாப்பிட வயிற்று நோய் தீரும்.

அஷ்ட சூரணம் (அகஸ்தியா வைத்திய காவியம்)

தேவையான பொருட்கள்:
1. பருத்தி விதை-3.5 கி
2. கிராம்-10.5 கி
3. கல்லுப்பு-10.5 கி
4. கருவேப்பிலை-10.5 கி
5. திரிகடுகு-35 கி
6. சீரகம்-35 கி
7. ஓமம்-35 கி
8. இலவங்கப்பத்திரி-35 கி

செய்முறை :
இவற்றைத் தனித்தனியே இடித்து சூரணித்து ஒன்று சேர்த்து கலந்து வைக்கவும்.

தீரும் நோய்கள் :
அஜீரணம், பசியின்மை, ருசியின்மை, வயிற்று வலி, மாந்த குன்மம், வயிற்றுப் போக்குடன் கூடிய அஜீரணம் நீங்கும்.
 

நிலாவரைச் சூரணம் (அகஸ்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்)

தேவையான பொருட்கள்:
1. நிலாவரை-10 கி
2. சுக்கு-10 கி
3. மிளகு-10 கி
4. ஓமம்-10 கி
5. வாய்விடங்கம்-10கி
6. சர்க்கரை-10 கி

செய்முறை :
மேற்கண்ட சரக்குகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பொடித்து சலிக்கவும். பின் அவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.

அளவு : 
ஒன்று முதல் இரண்டு கிராம் வரை வெந்நீருடன் இரு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:
வாயு, பொருமல், விம்மல், விக்கல், வெப்பநோய், உடல், எரிச்சல், வாந்தி, மலக்கட்டு, பித்தம் முதலியன குணமாகும்.

பறங்கிப்பட்டைச் சூரணம் (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள் :
1. பறங்கிப்பட்டை-100 கி
2. கருந்துளசிச் சாறு-50 மி .லி
3. சர்க்கரை- 100 கி

செய்முறை :
சுத்தி செய்த பரங்கிப் பட்டையைக் கருந்துளசிச் சாற்றில் ஊறவைத்து உலர்ந்த பின் பொடித்து சலித்து வைக்கவும். பின் சர்க்கரையைத் தனியே பொடித்து சலித்து கலந்து வைக்கவும்.

அளவு : 
1-2 கிராம் வரை சர்க்கரையும் பாலும் சேர்த்து தினம் இரு வேளை கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:
மேகம், வெண்குஷ்டம், கருங்குஷ்டம், தோல் நோய்கள் ஆகியன குணமாகும். ஒளி துலங்கும். பசியெடுக்கும்.
 

சீந்தில் சூரணம் (அகஸ்தியர் வைத்திய காவியம்)

தேவையான பொருட்கள் :
1. வஸ்திர காயம் செய்யப்பட்ட சீந்தில் பொடி-350கி
2. மஞ்சட் கரிசாலை சூரணம்-350கி
3. நாகப் பூச்சி சூரணம்-105கி

செய்முறை :
மேற்கண்ட சூரணங்களை நன்கு கலந்து வைக்கவும்.

அளவு: 
1-2 கிராம் தேனுடன் உண்ணவும்.

குணமாகும் நோய்கள் :
சர்க்கரையுடன் கலந்து உண்ண மயிர்வெட்டு, புழுவெட்டு, பொடுகு, சுரம் மற்றும் கண்ணில் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்தும். நீரிழிவு நோய்க்குச் சிறந்தது.

தாளிசாதிச் சூரணம் (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையானவை :
1. தாளிச பத்திரி-10கி
2.  இலவங்கப்பட்டை-10கி
3. ஏலம்-10கி
4. சுக்கு-10கி
5. அதிமதுரம்-10கி
6. பெருங்காயம்-10கி
7. நெல்லி முள்ளி-10கி
8. கோஷ்டம்-10கி
9.  திப்பிலி-10கி
10. சீரகம்-10கி
11. சதகுப்பை-10கி
12. கருஞ்சீரகம்-10கி
13. திப்பிலிக்கட்டை-10கி
14. கிராம்பு-10கி
15. ஜாதிபத்திரி-10கி
16. கற்கடக சிருங்கி-10 கி
17. ஜாதிக்காய்-10 கி
18. தான்றிக்காய்-10 கி
19. கடுக்காய்- 10 கி
20. சடாமஞ்சில்-10 கி
21. மிளகு- 10 கி
22. சிறுநாகப்பூ-10 கி
23. செண்பக மொட்டு-10 கி
24. வாய்விடங்கம்- 10 கி
25. இலவங்கப்பத்திரி-10 கி
26. ஓமம்-10 கி
27.  தனியா-60 கி
28. சர்க்கரை-120 கி

செய்முறை :
எல்லா சரக்குகளையும் இளவறுப்பாக வறுத்து பொடித்து சலித்து வைக்கவும், சர்க்கரையைத் தனியே பொடித்துச் சலித்து முன்பு சூரணித்த சரக்குகளுடன் நன்கு கலந்து வைக்கவும்.

அளவு : 
1 - 2 கிராம் தேனுடன் தினமும் இரு வேளை கொடுக்கவும்.

தீரும் வியாதிகள்:
வாத, பித்த, கப நோய்கள், சொறி சிரங்கு, வயிற்றெரிவு, குன்மம், வயிற்று வலி, நீர்ச்சுருக்கு, காமாலை, சுரம், வாயில் நீர் சுரத்தல், வெள்ளை, தாகம், பொருமல், காதிரைச்சல், இருமல், கைகால் குடைச்சல், வெப்பம், தொண்டைக்கட்டு, நீர்க்கட்டு, மயக்கம், நீர்க்கடுப்பு, நெஞ்செரிப்பு, கைகால் கடுப்பு, நீர் எரிச்சல், அஜீரணம் முதலியன குணமாகும்.

திரிகடுகு சூரணம் (அகஸ்தியர் பரிபூரணம் 400)

தேவையான பொருட்கள் :
1. தோல் நீக்கிய சுக்கு-200 கி
2. மிளகு-200 கி
3. திப்பிலி-200 கி

செய்முறை :
மேற்கண்ட மூன்றையும் எடுத்து சுத்தம் செய்து தனித் தனியே இடித்து சலித்து பிறகு ஒன்று சேர்த்து கலந்து வைக்கவும்.

அளவு : 
தினமும் 2-3 வேளைகள் 1 - 2 கிராம் வரை தேன், நெய் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.

குணமாகும் நோய்கள்:
பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, இருமல், சுரம் போன்ற நோய்கள் தீரும்.

திரிபலா சூரணம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள் :
1. கடுக்காய்த் தோல்-200 கி
2. விதை நீக்கிய நெல்லி வற்றல்- 200 கி
3. தான்றிக்காய்த் தோல்-200 கி

செய்முறை:
மூன்றையும் தனித்தனியே இடித்து, சலித்து ஒன்று சேர்த்து கலந்து வைக்கவும்.

அளவு : 
1 முதல் 3 கிராம் வரை 2 - 3 வேளைகள் தேன் மற்றும் நெய்யுடன் கலந்து கொடுக்க கண் ஒளி பெறும். சுடு தண்ணீருடன் கொடுக்க மலச்சிக்கல் குணமாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

தீரும் நோய்கள் :
சூரணத்தைக் கஷாயமாக்கி, புண்களையும், இரணங் களையும் கழுவலாம். நீரும் பீளையும் வடியும் கண்ணைக் கழுவலாம். வாய்ப்புண்ணிற்குக் கொப்பளிக்கவும் பயன்படுத்தலாம்.

ஏலாதி சூரணம் (அகஸ்தியர் ரத்தினச் சுருக்கம்)

தேவையான பொருட்கள் :
1. இலவங்கம்-10 கி
2. மிளகு-10 கி
3. சிறுநாகப்பூ-40 கி
4. தாளிசபத்திரி-80 கி.
5. கூகைநீர்-160 கி
6. சுக்கு-320 கி
7. ஏலம்-640 கி
8. சர்க்கரை-1270 கி

செய்முறை :
இவற்றைத் தூய்மை செய்து பொடித்து சலித்து பின்னர் சர்க்கரையைத் தனியே பொடித்து சலித்துக் கலந்து வைக்கவும்.

அளவு / தீரும் வியாதிகள்:
1 முதல் 2 கிராம் வரை தேனுடன் தினமும் இரு வேளைகள் கொடுக்க வாத, பித்த ரோகம், பித்தவாயு, ஊறல், நச்சுக்கடி, எலும்புருக்கி, சொறி, சிரங்கு ஆகியன குணமாகும்.

மதுமேக கற்பம் சூரணம்

தேவையான பொருட்கள்:
1. சிறுகுறிஞ்சான்-10 மி.கி.
2. வேப்பிலை-10 மி.கி.
3. சீந்தில்-10 மி.கி
4. நாவல் கொட்டை-10 மி.கி.
5. துளசி-5 மி.கி.
6. அத்தி-5 மி.கி.
7. பாகற்காய்- 10 மி.கி.
8.  திரிபலாதி-10 மி.கி.
9. கோவைக்காய்- 10 மி.கி.
10. கரிசாலை-10 மி.கி.
11. 11.அமுக்கரா-10 மி.கி

செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை நன்கு சூரணித்து கலந்து வைக்கவும்.

அளவு : 
2 - 5 கிராம் வீதம் 2 வேளைகள் உணவிற்கு முன் நீருடன் உட்கொள்ளவும்.

தீரும் வியாதிகள் :
நீரிழிவு, உடற்சோர்வு, தாகவறட்சி மற்றும் அனைத்து வித சர்க்கரை நோய்கள்.
 

கழற்சி சூரணம் (சித்த ஃபார்முலா ஆப் இந்தியா பார்ட் 1)

தேவையான பொருட்கள்:
1. கழற்சி பருப்புத் தூள்-100 கி
2. மிளகுத் தூள்-125 கி

செய்முறை :
மேற்கண்ட இரு தூள்களையும் கலந்து வைக்கவும்.

அளவு : 
300 - 400 மி.கி. வெந்நீரில்  உட்கொள்ளவும்.

தீரும் வியாதிகள்:
விரைவாதம், யானைக்கால் நோய் முதலியன.

வல்லாரை சூரணம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள் :
1. வல்லாரை-70 கி.
2. கிராம்பு-35 கி.
3. ஏலம் -35 கி.
4. ஜாதிக்காய்-35 கி.
5. ஜாதி பத்திரி-35 கி.
6. தாளிச பத்திரி-35 கி.
7. திரிபலாதி-35 கி.
8. மாசிக்காய்-35 கி.
9. சர்க்கரை-35 கி.

தயாரிக்கும் முறை:
வல்லாரையை பாலிலுலர்த்தி இடித்து பொடித்த சூரணம், கிராம்பு, ஏலம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, மாசிக்காய், தாளிசபத்திரி, திரிபலாதி போன்றவற்றைப் பொடித்து ஒன்றாய்க் கலந்து சர்க்கரையுடன் கலந்து வைக்கவும்.

அளவும் தீரும் நோயும் :
2 கிராம் முதல் 5 கிராம் வரை திரிகடி பிரமாணம். நெய்யில் உண்ண மேககாங்கை, மூலச்சூடு, உடம்பெரிவு தீர்ந்து தேகம் குளிரும்.

சிவதை சூரணம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. சிவதை வேர்-400 கி
2. திரிபலா-100 கி
3. திரிகடுகு-100 கி
4. ஏலம்-100 கி
5. சிறுநாகப்பூ-100 கி
6. கோரைக்கிழங்கு-100 கி
7. லவங்கம்-100 கி
8. பால்-1 லி

செய்முறை :
சிவதை வேரைப் பாலில் வேக வைத்து சுத்திகரிக்கவும். எல்லாவற்றையும் தனித்தனியே பொடித்து கலந்து கொள்ளவும்.

அளவு:
2-4 கிராம் தேன் அல்லது சர்க்கரையில் கலந்து கொடுக்கலாம்.

தீரும் வியாதிகள் :
மலக்கட்டு, வெப்பு, வாயுத் தொல்லை தீரும்.
 

கற்பூராதி சூரணம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. கற்பூரம்-100 கி
2. கோஷ்டம்-100 கி
3. கல்நார்-100 கி
4. ஜாதிக்காய்-100 கி
5. குங்குமப்பூ-100 கி
6. சந்தனம்-100 கி
7. சீரகம்-100 கி
8. மல்லி-100 கி
9.அமுக்கரா-100 கி
10. 10.சீந்தில் சர்க்கரை- 100 கி
11. முந்திரி-100 கி
12. பேரீச்சை- 100 கி
13. சிலாசத்து பற்பம்-100 கி
14. நெருஞ்சில் வேர்-100 கி
15. வில்வ வேர்-100 கி
16. நீர்முள்ளி விதை-100 கி
17. இலவம் பிசின்-50 கி
18. முத்தக்காசு-100 கி
19. விலாமிச்சம் வேர்-100 கி
20. இந்துப்பு-100 கி
21. வெண்காரம்-100 கி 
22. ஆவாரை அரிசி-100 கி
23. கஸ்தூரி மஞ்சள்-100 கி
24. சிறுநாகப்பூ-100 கி
25. 25.நிலப்பனக்கிழங்கு-100 கி
26. காஞ்சோன் கீரை- 100 கி
27. சிவப்பு சந்தனம்-100 கி
28. தக்கோலம்-100 கி
29. அதிமதுரம்- 100 கி
30. வால்மிளகு-100 கி

தயாரிக்கும் முறை:
மேற்கண்ட சரக்குகளை தனித்தனியே பொடித்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்து பயன்படுத்தவும்.

அளவு : 
1-2 கிராம் வீதம், 3-4 வேளைகள் தினமும் கொடுக்கவும்.

தீரும் வியாதிகள் :
சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களான மூத்திர எரிவு, சீறுநீரகக் கல், நீரிழிவு போன்ற நோய்களை குணப்படுத்த வல்லது.

சீரக சூரணம் (சித்த வைத்தியத் திரட்டு)

தேவையான பொருட்கள்:
1. சீரகம்-400 கி
2. சர்க்கரை-100 கி

செய்முறை :
சுத்தம் செய்த சீரகத்தை நன்றாக இடித்துத் தூளாக்கி வந்த எடைக்கு, கால் பங்கு, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

அளவு: 
1-2 கி காலை மாலை 40 நாட்கள் உட்கொள்ளவும்.

தீரும் வியாதிகள் :
கிறுகிறுப்பு, வாந்தி, மந்தம், உஷ்ணம், காங்கை முதலியவை தீரும்.

 

திராட்சாதி சூரணம் (தேரையர் கரிசல் -300)

தேவையான பொருட்கள்:
1. உலர் திராட்சை-100 கி
2. பேரீச்சை-100 கி
3. கோரைக் கிழங்கு-100 கி
4. காட்டு மிளகு-100 கி
5. சந்தனம்-100 கி
6. நெற்பொரி-100 கி
7. கூகைநீர்-100 கி
8. ஏலம்-100 கி
9. நற்சீரகம்-100 கி
10. வெட்டிவேர்-100 கி
11. திரிகடுகு-100 கி
12. பேராமுட்டி வேர்-100 கி
13. திரிபலாதி-100 கி
14. அதிமதுரம்-100 கி
15. சிற்றாமுட்டி வேர்-100 கி
16. சீந்தில் சர்க்கரை-100 கி
17. நிலக்குமிழ் வேர்-100 கி
18. நெருஞ்சில் வேர்-100 கி
19. விலாமிச்சம் வேர்-100 கி
20. மரமஞ்சள்-100 கி
21. கிராம்பு-100 கி
22. நெய்தல் கிழங்கு-100 கி
23. கஸ்தூரி மஞ்சள்-100 கி
24. பூலாங்கிழங்கு-100 கி
25. தாமரை வளையம்-100 கி
26. சர்க்கரை-3.2 கி
27. குங்குமப்பூ- 100 கி
28. கோஷ்டம்-100 கி
29. சிற்றாமல்லி வேர்-100 கி

செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை தனித்தனியே இடித்து பொடித்து சலித்து அனைத்தையும் ஒன்றுபட கலந்து வைக்கவும்.

அளவு:
1-2 கிராம் தேனில் உட்கொள்ளவும்.

தீரும் வியாதிகள்:
இளைப்பு, இருமல், பொருமல், சுவாசம், காசம், குன்மம், கொடிய வயிற்று நோய், அரோகம், வாந்தி, பயித்தியம், பாண்டு, சுரத்துடன் கூடிய சயம், ஜன்னி, மயக்கம், நாற்பது வகைப் பித்தம் இவை தீரும்.